கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளாகும். இதனால், அப்பகுதிகளில் சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, காட்டுமாடு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்கின்றன. பொதுவாக வனவிலங்குகள் இரவு நேரங்களில் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், வனத்தினுள்ளும் சுற்றித் திரியும். இதன் காரணமாக வனப்பகுதி ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை மூலம் எப்போதும் கவனமுடனும், வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறும் வாகனங்களை இயக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு பகுதி ஆறுகள் நிறைந்த பகுதி என்பதால் எப்போதுமே அங்கு செழுமையாகக் காணப்படும். மேலும், அந்தப் பகுதி பல்வேறு அரியவகை மரங்களும், மருத்துவக் குணம் கொண்ட அரியவகை செடிகளும் கொண்டுள்ள பகுதியாகும். ஆழியாற்றை சுற்றியுள்ள பல சிறிய நீரோடைகளும், இறுதியாக ஆழியாற்றை வந்து அடைகின்றன. இதனால் ஆழியாற்றில் இருந்து மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க ஆழியாறு, நவமலை எனும் பகுதியில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த நவமலை கோட்டூர் - மலையாண்டிப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.
அடர் வனப்பகுதி என்பதால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல, காலை 6 மணி முதல் மாலை 6 வரை அனுமதித்து வனத்துறை கட்டுப்பாடு வித்தித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அந்தப் பகுதியில் வாழும் பழங்குடி இன மக்களைத் தவிர்த்து வெளி ஆட்கள் செல்ல எக்காரணம் கொண்டு அனுமதி கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கோட்டூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மிதுன் என்பவர் தனது காரில் நவமலை வனப்பகுதி சாலையில் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்திற்கு முன்னால் ஒரு காட்டு யானை வந்துள்ளது. இவர் யானைக்கு வழிவிட்டு அமைதியாக நிற்காமல், தனது வாகனத்தில் இருந்த அதீத ஒளி கொண்ட முகப்பு விளக்கை ஒளிரவிட்டு யானையின் கண்களை கூசச் செய்து அங்கிருந்து விரட்டியுள்ளார். இப்படியாக சில தூரம் வரை அந்தக் காட்டு யானையை விரட்டியபடி சென்றுள்ளார் அ.தி.மு.க. பிரமுகர் மிதுன். பிறகு யானை பதட்டத்தில் பயந்தபடி காட்டுக்குள் சென்றபிறகு இவரும் அந்தச் சாலையில் தொடர்ந்து பயணித்துள்ளார். இந்தக் காட்சிகள் அவரது வாகனத்தின் உள்ளிருந்தே வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோ வெளியாகி யானை கொடுமை செய்யப்பட்டிருப்பது வெளியே தெரியவந்தபிறகு மிதுனுக்கு சமூகவலைத்தளங்களிலும், வன உயிர் ஆர்வலர்களும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்துவந்தனர். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறை அ.தி.மு.க. பிரமுகர் மிதுனுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் வித்தித்து நடவடிக்கை எடுத்துள்ளது.