அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்காக சென்னை வானகரத்தில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நாளை (11/07/2022) காலை 09.15 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் 90% நிறைவடைந்துள்ளனர். இறுதிக்கட்டப் பணிகளை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், பா.வளர்மதி, பெஞ்சமின், காமராஜ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் போல் மின்னணு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, ஸ்கேன் செய்த பிறகே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்லும் வகையில், ஆர்.எஃப்.ஐ.டி. (RFID - Radio Frequency Identification system)எனப்படும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர்களுடன் கூடிய 16 அதிநவீன நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 12 நுழைவு வாயில்களும், 250 செயற்குழு உறுப்பினர்களுக்கு 4 நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு நடைபெறும் இடம் முழுவதையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை முதல் மண்டபம் அமைந்திருக்கும் இடம் வரை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் அடங்கிய பேனர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. நாளை (11/07/2022) நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிகப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.