வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. குடியாத்தம் நகர் பகுதிகளில் சமீப காலமாக நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. தினமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று குடியாத்தம் நகர்மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் சௌந்தர் ராஜன் மற்றும் நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய மதிமுக உறுப்பினர் மோகன் தனது வார்டில் தினமும் நாய் கடியால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இன்று காலை கூட மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை நாய்க்கடித்ததாகவும் கூறி நாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி(அதிமுக ) மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலளித்துப் பேசிய நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், அதிகாரிகள் ஒரு வாரக் காலத்திற்குள் நாய்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உறுதி அளித்தார். இதனையடுத்து நகர மன்ற உறுப்பினர்கள் மீண்டும் நகர மன்ற கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால் நகர மன்ற கூட்டத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.