Skip to main content

அ.தி.மு.க. வி.ஐ.பி.களுடன் நெருக்கம்; பத்திரப்பதிவு ஊழியர் வீட்டில் ரெய்டு

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

admk leaders registration officers vigilance police raid

 

அ.தி.மு.க. ஆட்சியின்போது, அக்கட்சியின் வி.வி.ஐ.பி.க்களுடன் நெருக்கமாக இருந்து வந்த பத்திரப்பதிவுத்துறை உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சேலம் இரும்பாலை அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் காவேரி (வயது 58). இவர், சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்தை விட 200 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. 

 

அதன்பேரில், சேலம் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (அக். 11) காலை சேலம் இரும்பாலை கணபதிபாளையத்தில் உள்ள காவேரி வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். இளம்பிள்ளையில் உள்ள இவருடைய உறவினர்கள் இருவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. 

 

இந்த சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, ஆளுங்கட்சி வி.வி.ஐ.பி.க்களுக்கு இவரே முன்னின்று பத்திரப்பதிவு செய்து கொடுத்து வந்துள்ளார். அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் சிலர் இவரை பினாமியாக பயன்படுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அவர் பெயரிலும், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் உள்ள சொத்துகள் குறித்தும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர். 

 

எந்த ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் உதவியாளர் நிலையில் உள்ள ஊழியருக்கு தனி அறை ஒதுக்கப்படுவது கிடையாது. ஆனால், கடந்த ஆட்சியின்போது ஆளுங்கட்சி விவிஐபிக்களுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால், விதிகளுக்குப் புறம்பாக காவேரிக்கு மட்டும் தனி அறை, அவருக்கு உதவியாக சில ஊழியர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். 

 

பதிவுத்துறையில் சார்பதிவாளர்கள் முதல் ஐ.ஜி. வரை எந்த ஒரு உயரதிகாரியும், காவேரி பணியாற்றும் அலுவலகத்தில் இவரின் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது என்ற நிலையும் இருந்தது. முன்னாள் வி.வி.ஐ.பி.யின் வீட்டிற்குள் முன்அனுமதி பெறாமல் எந்த நேரத்திலும் உள்ளே சென்று அவரைச் சந்தித்துப் பேசும் அளவுக்கு செல்வாக்குடன் வலம் வந்தார். 

 

இதனால் முந்தைய ஆட்சியில் முக்கிய விஐபிக்கள் சொத்துகள் பதிவு செய்ய வேண்டுமெனில் காவேரியே முன்னின்று அதற்கான வேலைகளை கனகச்சிதமாக செய்து கொடுத்துள்ளார். 

 

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சூரமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையும் காவேரியை மையப்படுத்தி நடத்தப்பட்டதாகவே அப்போது சொல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதும் காவேரி வீட்டில் சோதனை நடந்துள்ளது. 

 

காவேரியின் வங்கி கணக்குகள், குடும்பத்தினரின் வங்கி கணக்கு விவரங்களையும் ஊழல் தடுப்புப்பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர். காலை 08.00 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 06.00 மணியளவில் நிறைவடைந்தது. 

 

அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களுடன் நெருக்கமாக இருந்த காவேரி வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் சோதனை நடத்திய விவகாரம் பத்திரப்பதிவுத்துறை மட்டுமின்றி அ.தி.மு.க. வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்