இருபத்தி ஒராண்டுகளுக்கு முன்பு வரை அய்யாவாடி பிரத்யங்கிராதேவி கோயில் இருப்பதாகவே அப்பகுதியில் உள்ள பலருக்குமே தெரிந்திடவில்லை.
2000- ஆம் ஆண்டின் மே மாத அமாவாசையன்று ஜெயலலிதாவும், அவரது தோழியான சசிகலாவும், அந்த பிரத்யங்கிராதேவி கோயிலில் சிறப்பு யாகத்தை செய்துவிட்டு சென்ற பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் என்கிற அடிப்படையில் அந்த கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள அய்யாவாடியில் உள்ள பிரத்யங்கிராதேவி கோயிலில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவும் மீண்டும் தனது கணவர் முதல்வராக வேண்டும் என யாகம் நடத்திவிட்டு சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுக் கவனிக்கச் செய்துள்ளது.
தமிழகத்திலேயே மிகவும் பிரசித்திப் பெற்ற பிரத்யங்கிராதேவி கோயில் அய்யாவாடியில்தான் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை அன்றும், பவுர்ணமி அன்றும் நள்ளிரவு முதல் விசேஷப் பூஜை நடக்கும், அந்தப் பூஜையில் கலந்து கொள்ளுவது மிகவும் விஷேசம் எனப் பொதுமக்கள் நம்புகின்றனர். யாக பூஜையில் கலந்து கொண்டால், குடும்பத்தில் உள்ள கிரகக் கோளாறுகள் அகலும், எதிரிகள் விலகுவார்கள், இழந்ததை மீட்க முடியும் என்பது நம்பிக்கை.
யாகபூஜை குறித்து அங்குள்ள குருக்கல் ஒருவரிடம் கேட்டோம், "கெளரவர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் அடைய பஞ்ச பாண்டவர்கள் இந்த கோவிலில்தான் யாகம் செய்தனர். அதன் பலனை அடைந்தனர். அந்த நம்பிக்கையில்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையான இன்னல்கள், சோதனைகளில் இருந்த காலத்தில், இங்கு வந்து சிறப்பு யாக பூஜை நடத்தி, மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
அந்த வகையில் தான் தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவும் யாகம் நடத்தி அதில் கலந்துகொண்டு மனமுறுகி வேண்டினார். அமாவாசை தினத்தன்று மட்டுமே நடைபெறும் இந்த யாக பூஜையின் விஷேசமே எதிரிகளை வீழ்த்தி, இழந்ததை மீட்டு, வெற்றிக் கிட்ட செய்யவுமே என்பது ஐதீகம். அதுபோலத்தான் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகிறார். கூட இருக்கும் ஒ.பன்னீர்செல்வம், அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சசிகலா எனப் பெரும் பிரச்சனை எடப்பாடிக்குக் காத்திருக்கிறது. அதோடு இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்வா, சாவா தேர்தல் என்பதால், தனது கணவர் நினைத்தது நிறைவேற வேண்டும். தனது கணவர் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். மீண்டும் முதல்வர் ஆகவேண்டும் என மனமுறுகி ஒரு மணி நேரம் வணங்கினார். ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு வேண்டினார்" என்கிறார் எதார்த்தமாக.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடங்கினார். அவரின் தேர்தல் பிரச்சாரம் அவருக்கு வெற்றியாக அமைய வேண்டும் என பழனிசாமியின் மனைவி ராதா யாகபூஜையில் கலந்துகொண்டது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.