Skip to main content

“தென்னரசுன்னு சொன்னால் வாய் வலிக்குமா? ஓ.பி.எஸ் திமுகவின் பி டீம்” - ஜெயக்குமார் தாக்கு 

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

admk jeyakumar talk about ops eps

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக சார்பில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தனித்தனி வேட்பாளரை களமிறக்கினர். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதால் ஓ.பி.எஸ் அணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டு, இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்வோம்., ஆனால் இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்லி வாக்கு சேகரிக்கமாட்டோம் என ஓ.பி.எஸ் அணியின் கு.பா. கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து கேட்டபோது, “இது முரண்பாடு, தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். இரட்டை இலை சின்னத்தை சொல்லி வாக்கு கேட்கும்போது, அதே சின்னத்தில் நிற்கும் தென்னரசு பெயரை சொல்லி வாக்கு கேட்டால் வாய் வலிக்கிறதா என்ன? ஊருக்கே தெரியும் ஒ.பி.எஸ் கதை” என்று பதிலளித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “இ.பி.எஸ்ஸூம், ஓ.பி.எஸ்ஸூம் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பே இல்லை. திமுகவின் பி டீமாக செயல்பட்டவரை அதிமுகவின் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கசாப்புக் கடைக்காரரை ஆடு நம்பியது போன்ற நிலைதான் ஓ.பி.எஸ் அறிவித்த வேட்பாளரின் நிலை. ஓ.பி.எஸ்ஸுக்கு செங்கோட்டையன் நன்றி தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து; அது கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்