நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழகம் மற்றும் புதுவை என நாற்பது தொகுதிகளிலும் விருப்பம் உள்ளவர்கள், விருப்ப மனுவை பெற்றுகொள்ளலாம் என அதிமுக கட்சி தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகமும் தொடங்கியது.
அதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நாற்பது தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளிப்பதால், நாற்பது தொகுதியிலும் அதிமுக தனித்து போட்டியிடும் என்று கூறமுடியாது. அதிமுகவில் தேர்தல் தொகுதி பங்கீடு குழு இருக்கிறது முதலில் விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் பெறப்படும், அதன்பின் கூட்டணியை தலைமை முடிவு செய்து, எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்று ஒதுக்கீடு செய்யும். அந்த நேரத்தில், தற்போது மனு போட்டவர்களும் கட்சிக்கு நாம் மனு கொடுத்தோம். கட்சி யாரை நிறுத்துகிறதோ அவர்களுக்கு வேலை செய்வோம் எனும் மனப்பான்மைதான் வேலை செய்வார்கள். மேலும் மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது எனத் தெரிவித்தார். மேலும் மேற்கு வங்க விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, வரையறை தாண்டி மேற்கு வங்க அரசோ, சி.பி.ஐ அமைப்போ செயல்பட்டால் அது தவறுதான் என கருத்து தெரிவித்தார்.