2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2016 மே 23ந்தேதி பதவியேற்றுக்கொண்டனர் அதிமுகவினர். பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகளை முடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது அதிமுக. அந்நாளை தமிழகம் முழுவதும் மே 23ந் தேதி கொண்டாடியது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு தந்தனர். கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பொது நிகழ்ச்சிகள் கட்சிகள், அமைப்புகள் என யாரும் நடத்தக்கூடாது என தடை விதித்துள்ளது அரசு.
![admk incident in thiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/0-OEIsZjCKJY2SOlKYBAZ8m3Ds7teea6ANQx0wYkCmY/1590290964/sites/default/files/inline-images/AZdxfdgh_0.jpg)
அதனை மீறி ஆளும்கட்சியான அதிமுக, ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை கொண்டாடியது. சட்டத்தை மீறி கொண்டாடியது மட்டும்மில்லாமல், கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுயிடங்களுக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிதிகளை மீறி நிகழ்ச்சி நடத்தியதோடு, சமூக இடைவெளியும் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று இனிப்பு வழங்கினர். இதனை அங்கிருந்த காவலர்களும் கண்டும் காணாமல் இருந்தனர். கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்க பொதுமக்களிடம் செல்ல பலர் இவர்கள் கூட்டமாக நிற்பதை பார்த்துவிட்டு பயந்து பின்வாங்கி சென்றனர். பயப்படாத சிலரை அழைத்து இனிப்பு வழங்கிவிட்டு சென்றனர்.