தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்று அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அ.தி.மு.க. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3,300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 11 பேர் கொண்ட அ.தி.மு.க.வின் வழிகாட்டுதல் குழுவுக்கும் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது.
கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி, "அ.தி.மு.க.வில் இனிமேல் ஸ்லீப்பர் செல் என்பது இல்லை; சிலர் வெளியே வந்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. அவர் வெளியே வந்தாலும் அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை; அவர்கள் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. முதுகில் ஏறித்தான் பயணம் செய்ய முடியும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி" என்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தேசிய கட்சியான பா.ஜ.க. இருக்கும் நிலையில் கே.பி.முனுசாமியின் பேச்சு பா.ஜ.க.வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.