கள்ளக்குறிச்சி மாவட்டம், மந்தைவெளி பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியை கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு அவதூறாக பேசினார். இதனைக் கண்டித்து தி.மு.க. தொண்டர்கள், அம்மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதனையடுத்து முன் ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் மாவட்டச் செயலாளர் குமரகுரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக் கூட்டத்தில் அவதூறாக பேசிவிட்டு சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்பது எப்படி சரி ஆகும். எனவே, அவதூறாக பேசிய பொதுக்கூட்டத்தை போன்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி ஏற்கனவே நடைபெற்ற அதே கள்ளக்குறிச்சி மாவட்டம், மந்தைவெளியில் இன்று அ.தி.மு.க. மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் குமரகுரு, முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார்.