தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி, வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த காட்பிரே வாஷிங்டன் நோபுள் இவர்களுடன் 19 சுயேட்சைகள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்திலுள்ள களக்கட்டில் காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் வேட்பாளர் ரூபி மனோகரனிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசுகையில், “அதிமுகவினர் தோல்வி பயத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர் வேட்பாளர் என்று அதிமுகவினர் விமர்சனம் செய்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அழகிரி, “ஜெயலலிதா சொந்த தொகுதியில் போட்டியிட்டாரா? வெவ்வேறு தொகுதியில்தான் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 75,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்று கூறியுள்ளார்.