Skip to main content

“அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்குவோம்” -ராஜேந்திர பாலாஜி

Published on 25/07/2024 | Edited on 25/07/2024
ADMK comes to ruling party we will give Rs. 2500 per month to women

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் திமுக அரசைக் கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, “நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்தத் துடிக்கும் திமுக அரசைக் கண்டித்து இங்கே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக ஆட்சி அமைந்த மூன்று வருடங்களில் மூன்று முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தியுள்ளனர். அதிமுக ஆட்சி நடைபெற்றபோது மின்சாரக் கட்டணத்தைப் பார்த்தால் மட்டுமல்ல, கேட்டாலே ஷாக்கடிக்குது என்று சொன்ன ஸ்டாலின், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன், பொங்கல் பரிசாக தரமற்ற பொருட்களைக் கொடுத்து மக்களின் கோபத்திற்கு ஆளானார். அடுத்து இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி உள்ளார். 

பாராளுமன்றத் தொகுதியில் 40க்கு 40 வெற்றி பெற்றவுடன், அந்த மமதையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 5% உயர்த்தி  உள்ளார். மின்சாரக் கட்டணத்தை நினைத்தால் ஷாக்கடிக்கவில்லை. மக்களின் இதயத்தைத் தூக்கி அடிக்கிறது. 100 ரூபாய் மின்சாரக் கட்டணம் கட்டிய மக்கள் தற்போது ஆயிரம் ரூபாய் கட்டக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதைப் பார்த்து பொதுமக்கள் அலறித் துடிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் 200 ரூபாயாக இருந்த மின்சாரக் கட்டணம்  தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சொன்னார்கள். அதையும் செய்யவில்லை. மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்று சொன்னார்கள். அதைச் செய்யாமல், இதுவரை மூன்று முறை கட்டணத்தை உயர்த்தி விட்டனர். அதிமுக ஆட்சியில் மத்திய அரசு மின் வரியைக் கூட்டச் சொன்னபோது கூட, அதைத் தமிழக அரசு மின்சார வரி இழப்பை ஏற்றுக்கொண்டு அதைச் சரி செய்தனர்.

இன்று திமுக அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை சொல்கிறது. மத்திய அரசு இவர்களை மின்கட்டணத்தை உயர்த்தச் சொல்லியதா? கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கடையில் துவரம் பருப்பு, அரிசி எதுவுமே மக்களுக்கு வழங்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்படும் அரிசியும் சாப்பிடத் தகுதி இல்லாத அரிசியாக உள்ளது. இந்த திமுக ஆட்சியில் ரேஷன் அரிசி சாப்பிட்டுப் பிழைத்துவிடலாம் என்று நினைத்தால், அந்த அரிசியும் தரம் இல்லாமல் உள்ளது. அதை மக்கள் வாங்கி ஆடு மற்றும் கோழிகளுக்குப் போடுகிறார்கள். அதிமுக ஆட்சியில் ரேஷன் அரிசி மிக அருமையானதாக விநியோகிக்கப்பட்டது. தற்பொழுது ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, பாமாயில் எதுவுமே இல்லை என்று மக்கள் புலம்புகிறார்கள். இதுபோல் ஏழை மக்களுக்கு ஊற்றப்படும் கெரசின் அளவையும் குறைத்து, அதிலும் கைவைத்து விட்டார்கள். திமுகவுக்கு வாக்களித்த பொதுமக்கள் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும், அடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும், எந்த விலைவாசியையும் ஏற்றவில்லை. அதேபோல், தற்போது திமுக ஆட்சியில் பேருந்துகள் தரம் இல்லாமல் இயக்கப்படுகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எந்த அரசுப் பேருந்தையும் நம்பி பொதுமக்கள் பயணிக்க முடியவில்லை. இது என்ன ஆட்சியா? தினசரி முதலமைச்சர் நாலு ஷூட்டிங் நடத்துகிறார். இதைப் பார்த்து மக்கள் ஏமாறுகிறார்கள். திமுக அரசு நினைப்பதுபோல் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. 2026இல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

தற்போது திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரி என அனைத்தையும் உயர்த்திவிட்டனர். சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , பகுதியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் பல கோடிக்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடம்  ஆகியும் இந்தத் திட்டம் இன்னும்  நிறைவேற்றப்படவில்லை. சிவகாசியில் பட்டாசுத் தொழிலை அரசு அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் அலைக்கழித்து வருகின்றனர்.  பட்டாசு த் தொழிலைவிட்டு பட்டாசு அதிபர்கள் ஓடக்கூடிய சூழ்நிலை உள்ளது.மேலும் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் நூற்பாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இது கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் நிர்வாகத் திறனற்ற செயலாகும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முடக்கி நெசவாளர்களின் வயிற்றில் அடிக்கின்ற கட்சி திமுக.  நூற்பாலை அதிபரிடம் கைத்தறித் துறை அமைச்சர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு கைத்தறி நெசவுத் தொழிலை அழித்து வருகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கவே எம்ஜிஆர் இலவச வேட்டி சேலைத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இன்று திமுக ஆட்சியில் அதற்கு பசை வாங்கக்கூட வக்கில்லை. இந்தத் திமுக ஆட்சியில் சிவகாசியில் பட்டாசுத் தொழில் தீப்பெட்டித் தொழில் ஆப்செட் தொழில் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இதற்கு பேப்பர் விலை உயர்ந்து விட்டது என்று திமுக காரணம் சொல்கிறது. இது பொய்யான தகவல்.

விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் நகராட்சியில் திமுக எம்எல்ஏக்கள் அதிக ஊழல் செய்து வருகின்றனர். நகராட்சியில் அனைத்து வவுச்சர்களையும் கணக்கெடுத்து வைத்திருக்கின்றோம். கடந்த 2016இல் விருதுநகர் அதிமுக சேர்மன் சாந்தி மாரியப்பன் நிர்வாகத்தில் மூன்று முறை அதிகாரிகள்ஆய்வு செய்தும், கணக்குகள் சரியாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் அனைத்தும் நேர்மையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. தற்போது திமுகவினர் செய்து வரும் ஊழல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்  கணக்கெடுத்து வைத்துள்ளோம். மீண்டும் 2026ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கெல்லாம் சரியான தீர்வு காணப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு திமுக அரசு மாதம் தோறும் ரூ.1000 கொடுத்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், மாதம் ரூ.2500 ஆக அதிகரித்துக் கொடுப்போம்." என்றார்.

சார்ந்த செய்திகள்