நாகை நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், குதிரைகளின் உடம்பில் அதிமுக சின்னமான இரட்டை இலையை வரைந்தும், குதிரையின் காது படலத்தில் இரட்டை இலை கொடியைக் கட்டியும் மேளதாளங்கள் முழங்க வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தவிதம் சமூக ஆர்வளர்களை முகம் சுளிக்கவே செய்துள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான இறுதிக் கட்ட பிரச்சாரம் இன்று 17ம் தேதி மாலை நிறைவடைந்தது. அதனால் அரசியல் கட்சியினர் போட்டிப்போட்டுக் கொண்டு வடைசுடுவது, டீ போடுவது, பூரி சுடுவது, கட்டிட வேலை செய்வதுபோல பாவனை செய்தது, தெருக்களைக் கூட்டுவதுபோல போட்டோ எடுப்பது, சைக்கிளில் போவது, அயனிங் செய்வது என பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வாக்கு சேகரித்தனர்.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தைச் செய்தனர். 31வது வார்டில் அதிமுக வேட்பாளராக விஜயலட்சுமி பால்ராஜ் போட்டியிடுகிறார். அவர் வாக்காளர்களைக் கவரும் வகையில் குதிரைகளில் அதிமுக சின்னமான இரட்டை இலையை வரைந்தும், குதிரையின் காதுப் பகுதியில் இரட்டை இலை கொடியைக் கட்டியும் மேளதாளங்கள் முழங்க வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். கூட்டத்தைக் கண்டு குதிரை நிலைகுலைந்து முரண்டு பிடித்தது. இதனை சில பொதுமக்களை ஆர்வமாகப் பார்த்தாலும், பலரும் இவர்களின் வெற்றிக்காகக் கால்நடைகளையும் விட்டுவைக்காம கொடுமை செய்கிறார்களே என முகம்சுளித்து புலம்பித்தீர்த்தனர்.