பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கிற தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வானதி சீனிவாசன் சமீபத்தில் கோவை திரும்பினார்.
கோவை திரும்பிய வானதி சீனிவாசனுக்கு கடந்த 4 நாட்களாகத் தீவிர காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற உடல்நலக்குறைவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டார். அந்தப் பரிசோதனையின் முடிவில், வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். நலமுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.