கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று (14.06.2021) மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை அழைத்துச் சேர்க்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதலில் அந்தந்தப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்பிறகு மற்ற பள்ளிகளிலிருந்து வருவோருக்கு மாணவர் சேர்க்கை நடக்கும். 11ஆம் வகுப்புக்கான சேர்க்கை முழுவதும் முடிந்த பிறகு, பிற வகுப்புகளுக்கான சேர்க்கை துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால், பத்தாம் வகுப்பு மாணவர்களின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மார்க் இருக்காது. மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும். மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்துப் பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை. ஆன்லைன் கல்வி, கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள் நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை'' என தெரிவித்துள்ளார்.