சிதம்பரம் அருகே எண்ணாநகரம் கிராமம் வழியாக கடந்த சில நாட்களாக சில இளைஞர்கள் இருசக்கரவாகனத்தில் வேகமாக ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் தெருக்களில் சென்று வருகிறார்கள். இதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் இந்த தெருவில் பள்ளிகூடம் உள்ளது குழந்தைகள் வந்து செல்லுமிடம் அதனால் மெதுவாக செல்லுங்கள் என கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் 27-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு எண்ணாநகரம் கிராம சாலையில் கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் எவ்வளவு நாளைக்கு தான் மெதுவாக போங்க என சொல்றது என கேட்டுள்ளார். இதற்கு அந்த 18 வயது இளைஞர் நீயெல்லாம் இப்படி பேசுறளவுக்கு வந்துட்டியா என அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதனம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் அதேநாளில் மதியதிற்கு மேல் அந்த 18 வயது இளைஞர் மற்றும் அவரது அண்ணன் பிரேம், கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்த வீரமணி, சுகுமார், சசி, முத்துகுமார், தினேஷ் உள்ளிட்ட சிதம்பரம், கீழமணக்குடி, குறியாமங்கலம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை திரட்டிகொண்டு எண்ணாநகரம் கிராமத்திற்கு வந்து அருண்குமார் வீட்டிற்கு கையில் கட்டை இரும்பு பைப்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். அப்போது அருண்குமார் வீட்டில் இல்லாததால் வீட்டை தாக்க முயற்சித்தபோது அங்கிருந்தவர்கள் இவர்களை தடுத்துள்ளனர். தடுத்தவர்களை இவர்கள் சராமாரியாக தாக்கி இவர்களின் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்துள்ளனர்.
இவர்கள் தாக்கியதில் கீரப்பாளையம் இந்திய ஜனநாய வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கவியரசன்(28) மற்றும் மச்சகேந்திரன் (65) ஆகிய இருவருக்கும் தலையில் பலமாக அடிபட்டதால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தலையில் தையல்போட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். மேலும் அதே ஊரை சேர்ந்த மங்கையர்கரசி உள்ளிட்ட 6 பேருக்கு தாக்குதலில் சிறுகாயங்கள் ஏற்பட்டது.
இந்நிலையில் 40 பேர் கொண்ட கும்பலில் தாக்கவந்த மாற்று சமூகத்தை சேர்ந்த வீரமணி மற்றும் சுகுமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் பிடித்து வீட்டில் அடைத்து வைத்து அவர்கள் எடுத்து வந்த 2 இருசக்கர வாகனத்தையும் சிதம்பரம் தாலுக்கா காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு உடனே தகவல் அளித்தும் மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, வாலிபர் சங்க தலைவர் ஆசியஜோதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் தாலுக்கா காவல்நிலையத்தை இரவு 8 மணிக்கு திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.