தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) உத்தரவிட்டிருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டிருந்த உத்தரவில், ‘தமிழக உள்துறை செயலாளர் அமுதா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிட்கோ நிர்வாக இயக்குநராக இருந்த மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு 10 மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ் வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்நிலையில் வருவாய்த்துறை செயலாளராக உள்ள அமுதாவுக்கு முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலர் அமுதா, ஐ.ஏ.எஸ்., முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி பதவியின் முழு கூடுதல் பொறுப்பை கவனிப்பார். மேலும் அவர் மக்களுடன் முதல்வர் மற்றும் பிற மக்கள் குறை தீர்க்கும் துறைகளுக்கு சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.