தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள், கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்திவருகிறார்.
கூட்டத்திற்குப் பின்னர் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகளா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளா என்பது குறித்து தமிழ்நாடு அரசு இன்று (06/08/2021) மாலை அல்லது நாளை காலை அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.