கூடுதல் அணு உலைகள் அமைக்கும் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகளை அமைக்க அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளத்தில் 3வது, 4வது அணு உலைகள் அமைக்க அனுமதியளித்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் கூடங்குளம், விஜயபதி, எருக்கந்துறை பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகையின் படி 28,397 பேர் வசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
அணுஉலை அமைக்கவுள்ள 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் 20ஆயிரம் பேர் வசித்தால் அங்கு அணு உலைக்கு அனுமதி வழங்க கூடாது என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விதி கூறுகிறது.
அப்படியிருக்கும் போது எப்படி அனுமதி வழங்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலை நிறுவுவதற்கான பணி தொடங்கும் முன் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அணுசக்தி துறை, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், இந்திய அணு மின் கழகம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- ஜீவா பாரதி