கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ்.,விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
‘என்ன நடந்தது? எதற்காக ஆர்ப்பாட்டம்?’ என அச்சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் பொன்ராஜுவிடம் கேட்டோம்.
“தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ். விருதுநகருக்கு வந்தாரு. ஆய்வு எதுவும் நடத்தல. அரசு வாகனத்தில் வராம சொந்த வேலையாத்தான் வந்திருந்தாரு. நாலஞ்சுபேரு கூட வந்திருந்தாங்க. விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் அவரை விருதுநகர் டவுன் தாசில்தார் செந்தில்வேலும் விருதுநகர் டவுண் ஆர்.ஐ. ஜெயப்பிரகாஷும் மரியாதை நிமித்தமா சந்திச்சப்ப, தாசில்தாரை திட்டிக்கிட்டே காரிலிருந்து இறங்கினாரு, தென்காசி ஜவஹர். ‘நீதான் தாசில்தாரா? அன்னைக்கு நான் வந்திருந்தேன். நீ வரல. எங்கே போன?’ அப்படின்னு ஒருமையில திட்டிருக்காரு. அப்புறம், நீ போயிட்டு வா-ன்னு தோளைப் பிடிச்சு தள்ளிருக்காரு. தென்காசி ஜவஹர் மாடிக்குப் போனதும் பின்னாலயே டவுன் ஆர்.ஐ. ஜெயப்பிரகாஷும் போயிருக்காரு. அவரை உள்ளே கூப்பிட்டு, ‘உட்காரு.. எந்திரி..’ன்னு சின்னப்புள்ள மாதிரி நடத்திருக்காரு. அப்புறம் காபி கொடுன்னு ஆர்.ஐ.கிட்ட கேட்டிருக்காரு தென்காசி ஜவஹர். டேபிள்ல ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டிலை ஆர்.ஐ. வச்சிருக்காரு. ‘ஏன் இத வச்ச? காபி மட்டும் கொடுக்க வேண்டியதுதான?’ன்னு தென்காசி ஜவஹர் கேட்க, பதிலுக்கு ஆர்.ஐ. ஜெயபிரகாஷ் ‘இல்ல சார், ஸ்நாக்ஸ் சாப்பிட்டு அப்புறம் காபி குடிப்பீங்கன்னு நெனச்சேன்’னு சொல்லிருக்காரு. உடனே தென்காசி ஜவஹர் ‘நீயெல்லாம் என்னய்யா ஆர்.ஐ? மாடு மேய்க்கத்தான் உன்ன அனுப்பனும்’னு சொல்லிருக்காரு. அதனால்தான், அரசு அலுவலர்களை மரியாதைக் குறைவாக நடத்தி, ஒருமையில் திட்டிய தென்காசி ஜவஹரைக் கண்டித்து 20 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்றார்.
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹரைத் தொடர்புகொண்டோம்.“நான் தென்காசில புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகச் சென்றபோது, வழியில் விருதுநகர்ல ஒரு அஞ்சு நிமிஷம் தங்கினேன். என்கூட அங்கே பயிற்சி தர்றதுக்காக ரிட்டயர்ட் புரொபசர் வந்திருந்தாங்க. அப்ப விருதுநகர் தாசில்தார் வந்தாரு. அவரு முகம் சந்தோஷமா இல்ல. நான் வர்றது அவருக்கு பிடிக்கலைங்கிற மாதிரி தெரிஞ்சது. அதனால, என்னைப் பார்த்தா உனக்கு பிடிக்கலயான்னு கேட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னால, ஒரு டெபுடி தாசில்தாரம்மா வரல. ஏன்னு கேட்டேன். முக்கியமான வேலை இருந்துச்சுன்னு சொன்னாங்க. அடிஷனல் சீப் செக்ரட்டரி வர்றப்ப, அவரைப் பார்க்கிறதவிட முக்கியமான வேலை என்னன்னு கேட்டேன். 32 வருஷ அனுபவ சீனியர் ஐ.ஏ.எஸ். ஆபீசர் நான். தாசில்தாரை தோளைப்பிடித்து தள்ளல. அவங்க பொய் சொல்லுறாங்க” என்று மறுத்தார்.
நடக்காத ஒன்றை நடந்தது எனக் கூறி, ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?