வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சாமந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் – சுகுணா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த மகன் மவீன்குமார். இவர் பெங்களூரில் தச்சுத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 29ந்தேதி பெங்களுரூவில் இருந்து சாமந்திகுப்பத்துக்கு வந்துள்ளார்.
மவீன் ஊரில் இருந்து வந்த தகவல் தெரிந்ததும் அவனது நண்பர்கள் சுதர்ஷன், பாவித், அருண் குமார், அஜீத் குமார், ராகுல், கல்யாண் குமார் ஆகிய 6 பேரும் செப்டம்பர் 30ந்தேதி காலை மவீன் குமார் வீட்டிற்கு வந்து அவனை வெளியில் போகலாம் என அழைத்து சென்றுள்ளனர். மதியம் நண்பர்கள் அனைவரும் டாஸ்மாக் கடையில் சரக்கு பாட்டில்கள் வாங்கிக்கொண்டு சாமந்திகுப்பத்தில் உள்ள மிசிரிலால் என்பவரின் தென்னந்தோப்பில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். நண்பர்கள் ஜாலியாக பேசியபடியே குடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
இரவு 7 மணியாகியும் மகன் வீட்டுக்கு வரவில்லையென மவீன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விசாரித்தபடியே தேடியுள்ளனர். குடிச்சிக்கிட்டு இருந்தோம், அப்பறம் கிளம்பிட்டோம் என போதையில் ஒருவன் உளற அவன்கள் குடித்துக்கொண்டிருந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது செல்போன் மட்டும் தரையில் கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தபோது, குடிபோதையில் ஜட்டி, பனியனோடு நண்பர்கள் ஏதோ விளையாட்டாக சண்டை போடுவதும், மிதமிஞ்சிய போதையால் நிற்க முடியாமல் தடுமாறுவதும், 3 பேர் மவீனின் கால்களை இருவரும், கையை ஒருவரும் பிடித்து எங்கேயோ தூக்கிக்கொண்டு போவது தெரிகிறது. இதனால் பதட்டமான உறவினர்கள் போதையில் இருந்த ராகுல் என்பவனிடம் கேட்டுள்ளனர்.
மவீனுக்கு போதை அதிகமானதால் போதை தெளிய கிணத்தில் தூக்கி போட்டோம். அவன் மேலயே வரல, தண்ணீருக்குள்ளயே மூழ்கிட்டான் என போதையில் கூறியுள்ளான். அதிர்ச்சியான உறவினர்கள், குடும்பத்தார், ஊரார் வாணியம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து இரவெல்லாம் அந்த கிணற்றில் தேடினர். அக்டோபர் 1ந்தேதி விடியற்காலை கிணற்றில் இருந்து மவீன்குமாரின் உடலை சடலமாக மீட்டனர்.
இதுதொடர்பாக வாணியம்பாடி தாலுக்கா போலிஸார் வழக்கு பதிவு செய்து, மவீன் உடலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலிஸார் அந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்துக்கொண்டு மவீன்குமாருடன் சென்று குடித்தவர்கள் யார், யார் என தேடினர். அதில் சுதர்ஷன், பாவித், அருண் குமார், அஜீத் குமார், ராகுல், கல்யாண் குமார் இருப்பது தெரியவந்தது.
முதல்கட்டமாக சுதர்ஷன், பாவித், அருண் குமார், அஜீத் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ராகுல், கல்யாண் குமார் ஆகியோரை தேடிவருகின்றனர். கைதானவர்களிடம் போலிஸ் விசாரித்தபோது, அஜித்குமார், அருண்குமார், சுதர்ஸன் மூவரும் தான் மவீனை தூக்கிக்கொண்டு போய் கிணற்றில் போட்டார்கள். கிணற்றில் தூக்கிப்போட்ட அவன் வரவில்லையென்றதும் நாங்கள் பயந்துப்போய் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனச்சொல்லி அவரவர் வீட்டுக்கு போய்விட்டோம் எனக்கூறியுள்ளனர். அதன்படி கிணற்றில் தூக்கிப்போட்ட மூவரையும் கைது செய்து ரிமாண்ட் செய்ய முடிவு செய்துள்ளது போலிஸ். மற்றவர்கள் உடந்தை எனவும் ரிமாண்ட் செய்யலாமா என ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதோடு, அவர்கள் கூறுவது உண்மையான காரணம் தானா என்றும் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுபோதையில் நண்பர்கள் சக நண்பனை கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.