
காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி சீரியல் துணை நடிகை புகார் அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் துணை நடிகை ஷீலா. தனியார் தொலைக்காட்சியில் ‘ஈரமான ரோஜாவே’ தொடரில் ‘தேன்’ என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியல் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர் திருமணமாகி மும்பையில் வசித்து வந்தார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெல்லாண்டி வலசு கிராமத்தை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவருடன் பழகி வந்துள்ளார். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சௌந்தரராஜனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் ஏற்பாடு செய்வதாகவும், சௌந்தரராஜனை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்குமாறும் எடப்பாடி காவல்நிலையத்தில் நடிகை ஷீலா புகார் அளித்துள்ளார்.