தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக, வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்திற்கு பல அண்டை மாநிலங்களும் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த பல முன்னனி நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் கேரள நிவாரண நிதிக்காக ரூ.70 லட்சம் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் உள்ள ரசிகர் மன்ற நீர்வாகிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.3 லட்சம் வீதம் அவர் நிதியுதவி அளித்துள்ளார்.
முன்னதாக நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் அளித்ததே தமிழக சினிமா நட்சத்திரங்களில் அதிக நிதியுதவியாக இருந்தது. இந்நிலையில், தமிழக சினிமா வட்டாரத்தில் தற்போது நடிகர் விஜய் அதிகபட்சமாக நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.