![ACTOR SURYA FILM SOORARAO POTTRU DATE ANNOUNCED](http://image.nakkheeran.in/cdn/farfuture/v4CTP0p0ZtNyo2kR9s5ll-qFm-zixnQmc3kuwe8rb_M/1598088043/sites/default/files/inline-images/SURYA444_0.jpg)
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30- ஆம் தேதி வெளியாகிறது என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூரரைப்போற்று தியேட்டரில் வெளியாவதற்கு காலம் தற்போது அனுமதிக்கவில்லை. திரையரங்கில் அமர்ந்து ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. என்னை சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன்கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியென நம்புகிறேன். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த முடிவை அனைத்து தரப்பினரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மக்கள் தியேட்டர் வந்து பார்க்கும் சூழல் திரும்பும் முன் மேலும் படங்கள் நடிக்க முடியும் என நம்புகிறேன். சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு ரூபாய் 5 கோடியை பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கரோனா முன்கள பணியாளர்கள், திரையுலகினர், மக்களுக்கு ரூபாய் 5 கோடி பகிர்ந்தளிக்கப்படும்." இவ்வாறு சூர்யா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் ஐந்து மாதமாக மூடி கிடப்பதால் ஓ.டி.டி. முறையில் சூர்யா படம் வெளியாகிறது. தமிழில் முதல் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் நடித்த திரைப்படம் தியேட்டருக்கு முன் ஓ.டி.டி.யில் வருகிறது. ஏற்கனவே சூர்யாவின் 2D தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் அமேசான் பிரைமில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பொன்மகள் வந்தாள்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டதற்கே திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.