கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகரன் மேடையில் பேசும்பொழுது ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவது என்பது உறுதி அதே நேரத்தில் இருவரும் அரசியலில் சாதிப்பதும் உறுதி. ஆனால் அப்படி சாதிப்பது என்றால் இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவதை விட இருவரும் ஒன்றாக சேர்ந்து அரசியல் செய்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நல்ல ஆட்சியை, அராஜகம் அற்ற ஆட்சியை தருவார்கள்.
அவர்களுக்கு பிறகு அரசியலில் அவரது தம்பிகளுக்கும் இருவரும் இடம்விட வேண்டும் என்றார். இதில் மறைமுகமாக விஜய்க்கு அரசியலில் வழிவிட வேண்டும் என்பதாக இருந்தது. இது அரங்கத்தில் குதூகலத்தையும் அதேபோல் ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரையடுத்து பேசுவதற்காக மேடைக்கு வந்த நடிகர் சரத்குமார் எஸ்ஏ.சந்திரசேகர் அரசியலில் ரஜினி, கமல் இணைவது குறித்து பேசியதற்கு தன்னால் பதிலளிக்க முடியும். ஆனால் இது சட்டமன்றமாக இருந்திருந்தால் இதற்கு நான் பதில் அளித்திருப்பேன். இது கலை நிகழ்ச்சி சட்டமன்றம் அல்ல. இங்கு நான் ஒரு கலைஞனாக வந்திருக்கிறேன் அரசியல்வாதியாக வரவில்லை அரசியல்வாதியாக வந்திருந்தால் இதற்கு நான் பதில் அளித்திருப்பேன். இதற்கு நான் தனியே அவருக்கு பதில் சொல்வேன் என்றும் அவர் கூறினார்.