நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், அரசியல் தொடர்பாகவும், கட்சி ஆரம்பிக்கலாமா என்பது குறித்தும் அவர்களிடம் ரஜினி கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. ரஜினியிடம் பேசிய நிர்வாகிகள், முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் என்றும் தெரிகிறது.
முன்னதாக இக்கூட்டத்திதற்காக, போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து நடிகர் ரஜினி புறப்படும்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் பட்டாசு வெடித்து, அவர் கார் மீது பூக்கள் வீசி கொண்டாடினர். அதேபோல் கூட்டம் நடக்குமிடமான ராகவேந்திரா மண்டபத்துக்குள் நுழைந்தபோது, அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு கூடியிருந்த ரசிகர்களில் ஒருவரான, ஜான் போஸ்கோ எனும் நபர் நம்மிடம், “நான் திருவொற்றியூரை சேர்ந்த மீனவர். தற்போது, இந்து மதத்தில் ஆர்வம்கொண்டு சாமியாராகவே மாறிவிட்டேன் " என்றார். மேலும், “ரஜினிகாந்த் ரசிகர்களில் நானும் ஒருவன் அவர் தற்போது தேர்தலை சந்தித்தால், நிச்சயம் 51 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவார். மேலும், சகாயம் ஐ.ஏ.எஸ். போன்றோரும் இணைந்தால் நிச்சயம் 70 சதவீத வாக்குகள் அவருக்கு கிடைக்கும். இன்றைய சூழலில் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என நம்பிக்கை இருக்கிறது.
ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததால் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. அவர் நன்றாகவே இருக்கிறார். அப்படி ஏதாவது உடல் நிலை குறைவாக இருந்தால், அவர் என்னை சந்தித்தால் நான் அவரை குணப்படுத்துவேன்” என்று தெரிவித்தார்.
பின்பு கூட்டம் முடிந்து வீடு திரும்பிய ரஜினி அவரது போயஸ் தோட்ட வீட்டின் முன் இருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். நான் எடுக்கும் முடிவுக்கு மாவட்ட செயலாளர்கள் கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.