நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.
அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.