கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வுக்கூடம் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று ரூ.18 கோடி செலவில் அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியும், 3 சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்களும், 8 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தனர்.
விழாவில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மருத்துவத்துறை வரலாற்றில் முதன் முறையாக 29 புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்படுவது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 18 கோடி செலவில் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு ரூ. 12 கோடிக்கு கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு அரசு மருத்துவத்துறை சார்பில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இம்மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தருவதில்லை. வெளியே சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்ற புகார் வந்துள்ளது. இது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. அங்கு இதுபோன்ற புகார் இல்லை. அனைத்து வசதியும் உள்ள இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் செய்ய வெளியே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று எடுத்து வர சொல்லும் அவல நிலை உள்ளது. அரசு சார்பில் அரசாணை வெளியிட வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் கேட்டுள்ளார். அந்த அரசாணையை வெளியிட முழு முயற்சி எடுத்து வருகிறோம். தமிழ்நாடு முதல்வர் மனித வள ஈர்ப்பு என்ற அந்த அரசாணையை வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த அரசாணை வெளியில் வந்தவுடன் இதுபோன்ற தவறுகள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை விட்டுவிடமாட்டோம். யார் தவறு செய்தாலும் கல்லூரி முதல்வர் அவர்களுடைய பெயர்களை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மருத்துவர்கள், ஊழியர்கள் மனசாட்சியோடு பணியாற்ற வேண்டும். இந்த மருத்துவமனையில் கண்காணிப்பு வளையத்தை ஏற்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “இந்த கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. இம்மருத்துவமனையில் வெளியே சென்று மருந்து வாங்கி வர சொல்லி சீட்டு எழுதி கொடுப்பவர்கள் மீது கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடிய விரைவில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விடிவுகாலம் வந்து விடும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இம்மருத்துவமனை குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணம் உள்ளது. எனவே இது சிறந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அமைய அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்றார்.
விழாவில் முன்னதாக கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சி. திருப்பதி வரவேற்றுப் பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ. ஐயப்பன் (கடலூர்). ம. சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோயில்), அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் கே. பழனி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். முடிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் கே.எஸ். ஜூனியர் சுந்தரேஷ் நன்றி கூறினார்.
விழாவில் உதவி ஆட்சியர் ராஷ்மி ராணி, ஏஎஸ்பி பி. ரகுபதி, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பாலாஜி சுவாமிநாதன், டாக்டர் பாரி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த. ஜேம்ஸ் விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்பு சந்திரசேகர், ஏ.ஆர்.சி. மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.