கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றுவந்த 12ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தில் பள்ளி வளாகம் முழுவதும் சேதமானது. இதில், பள்ளி மாணவர்களின் சான்றிதழ்களும் எரிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கள்ளக்குறிச்சியில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடக்கும்.
9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் வகுப்பு தொடங்கப்படும். பள்ளியில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் பயின்று வந்த மாணவர்களின் பெற்றோர்கள் விரும்பினால் தமிழகத்தில் உள்ள எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். தீயில் எரிந்துள்ள ஆசிரியர்களின் சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.