திருச்சி ஆவின் நிறுவனத்திலிருந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தில் பொறியியல் மேலாளராக இருப்பவர் ஹரிராம்.
இந்நிலையத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் பாலைப் பதப்படுத்தும் பாய்லர் இருக்கிறது. இது மொத்தம் ஐந்து லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் பாய்லர். கடந்த வாரம் இந்தப் பாயலர் திடீரென பழுதாகியுள்ளது. அதனைப் பராமரித்து பழுது பார்க்கும் பொறுப்பு, நிறுவனத்தின் பொறியியல் மேலாளரான ஹரிராமிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஹரிராம் 2 நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணியின்போது அலட்சியமாக இருந்ததற்காகவும் தனது பொறுப்பிலிருந்து தவறியதற்காகவும் திருச்சி ஆவின் பொறியாளர் மேலாளர் ஹரிராமை சஸ்பெண்ட் செய்து ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். ஹரிராம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் இரண்டாவது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.