போதைப் பொருட்களின் பயன்பாட்டையும், புழக்கத்தையும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக காவல் துறையில் 'ஆப்ரேசன் கஞ்சா' என்ற திட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும் எனத் தமிழக முதல்வர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'இளையசமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதைப்பொருள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான நாளாக அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது. அன்றைய தினம் கல்லூரி, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதையின் தீமைகள் குறித்து காணொளி காட்சிகள் திரையிடப்பட இருக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பாக முறையான தகவல் தெரிவிக்கப்படும். அன்றைய தினம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு விழாவில் கலந்து கொண்டு பங்காற்ற வேண்டும். இது அரசியல் பிரச்சனை அல்ல நாட்டின் பிரச்சனை குறிப்பாக இளைய சமுதாயத்தின் பிரச்சனை. போதை பாதை அழிவுப்பாதை என்பதை உணர்த்துவோம். அதன் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்போம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.