சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கடந்த 25ஆம் தேதி வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த நான்காம் தேதி மாணவிகள் சிலர் மயக்கம் அடைந்தது மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் ஆய்வுகள் நிறைவுபெற்ற பின் பள்ளி இன்று திறக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. வாயுக்கசிவு குறித்து இறுதிக்கட்ட அறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்து வரும் நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு வரும் வரை பள்ளி திறக்கப்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இன்றும் அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் எந்தவொரு வாயு கசிவுக்கான ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விடுமுறைக்காக மாணவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாணவர்களே மர்மபொருட்களை எடுத்து வந்து அதன் மூலம் மயக்கம் ஏற்படுவதற்கான பணிகளை செய்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக வாயுக்கசிவால் மயக்கமடைந்த மாணவி இரண்டாவது முறையும் மயக்கமடைந்ததாகவும், மற்ற யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிக்கு உள்ளே 'பெப்பர் ஸ்பிரே' கொண்டுவரப்பட்டதை காவல்துறை உறுதி செய்துள்ளது. எனவே பள்ளி மாணவர்களாலே விடுமுறைக்காக இதுபோன்ற சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.