சேலத்தில் 58 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அமுதசுரபி கூட்டுறவு சங்க கணக்காளரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டினம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர், தன் உறவினர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலத்தில் அமுதசுரபி கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், கூட்டுறவு சங்க விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் இதன் கிளைகளைத் தொடங்கி நடத்தி வந்தனர்.
இந்த சங்கத்தில் குறுகிய கால முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை சங்க நிர்வாகிகள் வெளியிட்டனர். இதை நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள், இந்த சங்கத்தில் முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையைத் தராமல் சங்கத்தினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். தான் 2.92 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்ததாகவும், அந்தப் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து ஆய்வாளர் சித்ரா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். முதல்கட்ட விசாரணையில், 1000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று சுமார் 58 கோடி ரூபாய்க்கு மேல் அமுதசுரபி கூட்டுறவு கடன் சங்கம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தின் தலைமையிடம் மற்றும் அனைத்து கிளைகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த ஜெயவேலை கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த எடப்பாடி அருகே உள்ள எரப்பட்டிரெட்டியூரைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவரை காவல்துறையினர் இரு நாள்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒரு அலைப்பேசி கைப்பற்றப்பட்டுள்ளது. அவரை, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த மோசடி தொடர்பாக தங்கபழம், சரண்யா, பிரேம் ஆனந்த் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.