தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 1990ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி, 13,000 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் அவர்களை பணியிலிருந்து நீக்குவதும், திமுக ஆட்சி அமைந்ததும் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்துவதும் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இது தொடர்பான வழக்கு கடந்த பத்து வருடங்களாக உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம், ‘மக்கள் நல பணியாளர் திட்டம் தொடர வேண்டும். ஆட்சிகள் மாறினாலும், மக்கள் நலப் பணியாளர் திட்டம் தொடர வேண்டும்’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பினால் மக்கள் நலப் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500க்கும் கூடுதலான மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்; ஆட்சி மாறினாலும் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
“மக்கள் நல பணியாளர் திட்டம் தொடர வேண்டும்” - உச்ச நீதிமன்றம்
ஆட்சி மாற்றம் நிகழும் போது முந்தைய ஆட்சியின் முடிவுகளை மாற்றக்கூடாது என்பது தான் இந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் முக்கிய அறிவுரை ஆகும். உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரை இனி வரும் காலங்களில் அனைத்து அரசுகளாலும் கடைபிடிக்கப்பட வேண்டும்.
மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தும் விஷயத்தில் அவர்களுக்கும் ஊதிய உயர்வு, பணி நீக்கப்பட்ட காலத்தையும் பணித்தொடர்ச்சியாக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும் தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும்.
2011-ஆம் ஆண்டில் பணி நீக்கப்பட்ட மக்கள்நலப் பணியாளர்களில் பலர் இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்து விட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, அவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களில் ஒருவருக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலையையும் வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.