கும்பகோணத்தில் பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் விபத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தின் மையப்பகுதியான காமராஜர் சாலையில் உள்ள இரண்டு மாடிகள் கொண்ட வீடு ஒன்றை புதுப்பிக்கும் பணியில் கட்டிடத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இன்று மதியம் கார்த்திக், சதாம் உசேன் என்ற இரண்டு தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த கட்டிடத்தின் கூரை மீது இருந்த கான்கிரீட் ஸ்லாப் பெயர்ந்து விழுந்தது. அந்த இடிபாட்டிற்குள் இருவரும் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் சதாம் உசேன் என்ற தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால் கார்த்திக் என்ற தொழிலாளி உள்ளே சிக்கிக்கொண்ட நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். ஆனால் கட்டிட தொழிலாளி கார்த்திக் உயிரிழந்துவிட்டதாகவும், சடலம் மீட்கப்படாத இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கும்பகோணம் காமராஜர் சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.