மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்தக் கோரச் சம்பவத்தில் 13க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ஐந்து லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தியை உடனடியாகச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
முதலைச்சரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் பி.மூர்த்தி விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது. முதல்வரின் நேரடியான கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். விபத்து எப்படி நிகழ்ந்தது அப்போது பணியிலிருந்தவர்கள் எத்தனை பேர் என்கிற விவரங்களை எல்லாம் அதிகாரிகள் விசாரணை செய்து பெற்று வருகின்றனர். சில உத்தரவுகளின் பேரில்தான் நாம் உரிமத்தினை தருகிறோம். அது முறையாகக் கையாளப்பட்டதா இல்லையா என்பதை விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன். முறையாக இல்லாமல் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.