ஆவடி துணை ராணுவப் பயிற்சி மையத்தை சேர்ந்த 71 துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பயிற்சி முடித்து விட்டு மீண்டும் நேற்று 5 இராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணை இராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது.
அதனை தொடர்ந்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு தலைமை காவலர் ராமசந்திரன் மற்றும் காவலர் வல்லவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.