நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள வீடு ஒன்றில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. அவரது வீட்டில் இன்று கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்துள்ளது. இதனால் பார்த்தசாரதி கேஸ் ஏஜென்சி ஊழியருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த ஏஜென்சி ஊழியர் அருண்குமார் சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து உடனடியாக நாமக்கல் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீப்பிடித்துக் கொண்டிருந்த வீட்டில் புகுந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வீட்டின் உரிமையாளர் பார்த்தசாரதி, அண்டை வீட்டைச் சேர்ந்த தனலட்சுமி, கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் பாரத்தசாரதி மற்றும் அண்டை வீட்டைச் சேர்ந்த தனலட்சுமி ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்தது. கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் 90% காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேர்ந்தது குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கேஸ் சிலிண்டர் விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.