பழனி அருகே தனியார் பஸ் மோதியதில் டூவீலரில் வந்த கணவன் மனைவி பலியாகினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பஸ்சுக்கு தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தலம்பட்டியை சேர்ந்த வயதான தம்பதிகள் இருவர் மற்றும் வயதான பெண்மணி என மூவர் நேற்று இரவு பழனியிலிருந்து சொந்த ஊருக்கு டூவீலரில் திரும்பியபோது மயில்முருகன் என்ற தனியார் பஸ் மோதியதில் கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களுடன் சென்ற மூன்றாவது நபரான அங்காத்தாள் என்ற வயதான பெண்மணி காயங்களுடன் மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் அந்த தனியார் பஸ் மீது கல் எறிந்தும், தீவைத்தும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். தீவைக்கப்பட்டதில் அந்த பேருந்து முழுவதும் எரிந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாவட்ட எஸ்பி சக்தி இது தொடர்பாக விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.