கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது மத்திய அரசின் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகரில் பல்வேறு பணிகள் நடந்தன.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையின் அடையாளமான வ.உ.சி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள், மாணவ மாணவிகளின் சங்கமம், குடியரசு தின, சுதந்திர தின விழாக்களின் அணிவகுப்பு என அன்றாடம் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்த வண்ணமிருக்கும். கூட்டமும் திரளுவதுண்டு. அதற்காக மைதானத்தைச் சுற்றி கேலரிகளுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாளையின் முத்திரையான வ.உ.சி. மைதானத்தை சீரமைத்து நவீனமயமாக்குகிற வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக 14 கோடி மதிப்பீட்டில் கடந்த 2021 பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கின. அதற்காக மைதானம் மூடப்பட்டது. பின்னர் அங்கு 1750 பேர் அமரக்கூடிய புதிய கேலரிகள் அமைக்கப்பட்டன. நடைப்பயிற்சி வசதிகள், பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கிற வகையில் புதிய வசதிகள், 320 அடியில் பிரம்மாண்ட மேடை, மின் கோபுர விளக்குகள் என மைதானம் பளபளப்பாக அமைக்கப்பட்டாலும் பணியில் தரமில்லை என்று அப்போதே சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தச் சூழலில் நெல்லையில் நேற்று காற்றுடன் பெய்த மழை காரணமாக வ.உ.சி மைதானத்தின் இரு பகுதிகளில் இருந்த மேற்கூரைகளின் கான்கிரீட்., தூண்களோடு பெயர்ந்து இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக மைதானத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இந்தச் சம்பவம் பொது மக்களை அதிரவைத்துள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது நெல்லையின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் பணியில் தரமில்லை என்றும், குறிப்பாக பாளை வ.உ.சி மைதானம் பற்றியும் நாங்கள் புகாரளித்துள்ளோம். தற்போது நடந்த சம்பவத்தின் மூலம் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.