மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறையில், காஷ்மீரில் அமைதியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் கண்டன உரையாற்றிய பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்ஏ காஷ்மீர் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமான பகுதி அல்ல என்று, நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் நேரு கூறியதை குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது...
காஷ்மீரின் உண்மையான வரலாற்று பின்னணியை மறைத்து, தேச பக்தி என்ற பெயரில் உண்மைகளையும், நீதியையும் புதைத்து விட சிலர் முயற்சிக்கிறார்கள். நேபாளத்தை போல அது ஒரு தனி நாடாக இருந்தது. பாகிஸ்தான் ஊடுறுவல், பலுச் பழங்குடி படைகளின் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு கேட்டு, அவர்கள் இந்தியாவுடன் தற்காலிகமாக இணைந்தார்கள். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய ஒப்பந்தம் ஒன்றை நம் நாட்டுடன் செய்து கொண்டார்கள்.
அது தமிழகம், கேரளா, பீஹார், குஜராத் போல ஏற்கனவே நம்மோடு இருந்த பகுதி அல்ல.இதை நேரு நாடாளுமன்றத்திலும் பதிவு செய்துள்ளார். இந்திய அரசு காட்டும் முழு காஷ்மீரை உள்ளடக்கிய வரைபடத்தை ஐ.நா. ஏற்கவில்லை. காஷ்மீரில் மட்டும் ஏன் ஐ.நா. அலுவலகம் உள்ளது? அது ஏன் சென்னை, பெங்களுரில் இல்லாமல் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மட்டும் இருக்கிறது?
காஷ்மீரில் பிறர் நிலம் வாங்க தடை இருப்பது போல், நாகலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும் இருக்கிறது. அது 371 வது சட்டப் பிரிவாகும். நாங்கள் ஈழத்தமிழர்களுக்காக துடித்தது போலவே, காஷ்மீரிகளுக்காகவும் போராடுகிறோம்.நாகலாந்து, மணிப்பூர் மக்களுக்காகவும் பேசுகிறோம். உரிமையும், நீதியும் மறுக்கப்படும் மக்களுக்காக எப்போதும் போராடுவோம்.
இன்று காஷ்மீரில் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு தடை என செய்தி வருகிறது. அம்மக்களின் வழிபாட்டுரிமையை பறிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்? இது என்ன நியாயம்? இதை ஏற்கவே முடியாது. காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
வரும் திங்கள் கிழமை அன்று அங்கு பக்ரீத் பண்டிகையை மக்கள் கொண்டாட ஏற்பாடு செய்வது இந்திய அரசின் கடமையாகும். அங்கு குர்பானி எனும் கால்நடைகளை இறைவனுக்கு கொடுக்கும் சடங்குகளை அமைதியாக நடத்திட அனுமதித்திட வேண்டும். காஷ்மீரில் தலைவர்கள் செல்ல தடை போடுகிறார்கள். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், செல்போன், எஸ்எம்எஸ் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த சட்டத்தையும் திணிக்க முடியாது. அந்த மக்களிடம் கருத்து கேட்டே, எதையும் செய்ய வேண்டும். அந்த மக்கள் பாகிஸ்தானை வெறுத்து, நம்மை நம்பி வந்தவர்கள். அந்த நம்பிக்கையை ஏமாற்றி விடக் கூடாது.
முன்னாள் பிரதமர் நேரு, காஷ்மீர் மன்னர் ஹரிசிங், முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல், 370 வது சட்டப் பிரிவை உருவாக்கிய தஞ்சாவூர் தமிழரான கோபால்சாமி ஐயங்கார் ஆகியோர் உருவாக்கிய காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் எல்லைக்குள்ளேயே, பழைய சிறப்பு அந்தஸ்துடன் நீடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம்.
உடனடியாக இந்திய அரசு, அங்கீகரிக்கப்பட்ட கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அமைதிக்கான தூதுக் குழுவை காஷ்மீருக்கு அனுப்பி, அங்கு என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் அஹ்மதுல்லா தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர் , மற்றும் சர்புதீன் காக்கா, மஜீது, அன்சாரி உட்பட திரளான மஜகவினரும் , ஜமாத்தினரும் பங்கேற்றனர்.