தர்மபுரியில் சட்டவிரோதமாக வீட்டில் ஸ்கேன் இயந்திரங்களை வைத்து கருவில் உள்ளது ஆணா பெண்ணா எனத் தெரிவித்து வந்த கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சட்டவிரோதக் கருக்கலைப்பு நடைபெற்றது தொடர்பான தகவல்களை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பெண் குழந்தைகளை அதிகளவில் கருக்கலைப்பு செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மொரப்பூர் பகுதியில் ஆண், பெண் விகிதாச்சார பிறப்பு என்பது குறைவாக இருந்ததையடுத்து தர்மபுரி மருத்துவத் துறையின் இயக்குநர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் ஸ்கேன் செய்து கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா எனச் சொல்வது மற்றும் கருக்கலைப்பு செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
ராக்கம்மாள் என்ற பெண் வீட்டில் இது இயங்கி வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி பகுதியில் தனியார் மருத்துவமனையில் ராக்கம்மாள் பணியாளராக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவருக்கும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கருக்கலைப்பு செய்பவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டில் இயந்திரங்களை வைத்துக்கொண்டு கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நேற்று தர்மபுரி மருத்துவத் துறையின் இயக்குநர் சாந்தி நேரடியாக இந்த கும்பலை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார். இதில் கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதற்கும், கருக்கலைப்பு செய்வதற்கும் இந்த கும்பல் 30 ஆயிரம் வரை பணம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.