சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் சி சிதண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி இணைந்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஆதார் சேவை மற்றும் சிறுசேமிப்பு முகாம் நடத்தியது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலக தலைவர் ரவி கலந்து கொண்டு அஞ்சலகத்தில் பொதுமக்களுக்கு ஆதார் கார்டில் திருத்தம், புதுப்பித்தல், சிறு சேமிப்பு கணக்கு தொடங்குதல், இந்திய அஞ்சல் கட்டண வங்கி கணக்குத் தொடங்குதல், விபத்து காப்பீடு, அஞ்சல் ஆயுள் காப்பீடு உள்ளிட்டவை குறித்து பேசினார்.
மேலும், பொதுமக்களுக்கு அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேவைகளை தெரிவிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதில், குடியிருப்போர் நல சங்க நிர்வாகி கே.என் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் சந்திரபிரகாஷ், வார்டு உறுப்பினர் கருணாநிதி, உதவி தலைமை அலுவலக தலைவர் கோதண்டபாணி, அஞ்சல் வங்கி மேலாளர் முகமது சலீம் உள்ளிட்ட தபால் ஊழியர்கள், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதார் அட்டை பதிவு செய்வதோடு, பணம் இல்லாமல் அஞ்சல் வங்கி கணக்குகளையும் தொடங்கியுள்ளனர்.