Skip to main content

“என்னுடைய 80லட்சம் மதிப்பிலான சொத்தை மீட்டுத் தர வேண்டும்”-ஆட்சியரிடம் மனு அளித்த 96 வயது மூதாட்டி!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

asfsad

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் உள்ளது கிடங்கல். இந்த பகுதியைச் சேர்ந்தவர் தொண்ணூத்தி ஆறு வயது மூதாட்டி பாப்பம்மாள். இவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக தட்டுத்தடுமாறி தள்ளாடிய படியே வந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அதில் மூதாட்டி பாப்பம்மாள் தனக்கு சொந்தமான சுமார் 80 லட்சம் மதிப்பிலான சொத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அடமானமாகக் கொடுத்துள்ளார்.

 

அந்த அடமான பத்திரத்தை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது அந்த நபர் சொத்து முழுவதையும் கிரையம் பெற்றதாக பத்திரம் தயார் செய்து பாப்பம்மாளை ஏமாற்றி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதை பதிவு செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக தன்னை ஏமாற்றிய நபரிடமிருந்து தமது சொத்தை மீட்டுத் தருமாறு கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளதாக பாப்பம்மாள் கூறினார். வயதான மூதாட்டியிடம் அடமானம் எனக்கூறி கிரையம் பெற்ற அந்த நபர் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாப்பம்மாளிடம் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அடுத்தவர் உதவி இல்லாமல் நடக்கக்கூட முடியாத தள்ளாடும் மூதாட்டி பாப்பம்மாளின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.  

 

 


 

சார்ந்த செய்திகள்