நேற்று இரவு முதல் சென்னையில் பலபகுதிகளில் கனத்த மழை பொழிந்து வருகிறது. சென்னையில் வியாசர்பாடி, மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
அதிகபட்சமாக சென்னை அயனாவரத்தில் ஒரேநாளில் 9.6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் பெரம்பலூரில் 8.8 சென்டி மீட்டர் மழையும், அம்பத்தூர் 8.5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. புரசைவாக்கத்தில் 7.8 சென்டி மீட்டர் மழையும், மாம்பலம் 7.6 சென்டி மீட்டர் மழையும், எழும்பூர் 7.4 சென்டி மீட்டர் மழையும், மயிலாப்பூரில் 7 சென்டி மீட்டர் மழையும், தண்டையார்பேட்டையில் 6.5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். தேர்வு நடைபெறுவதால் சென்னையில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம், செவிலிமேடு வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் கடலில் பலத்த காற்று வீசுகிறது. நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்கள் மூன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.