உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.