ரயிலில் கஞ்சா கடத்தி வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் சூரமங்கலம் ரயில்நிலையத்தில் ரயில்வே காவல்துறை தனிப்படையினர் திங்கள்கிழமை (ஜூன் 27) அதிகாலை, தன்பாத் & ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் ஏறி தீவிர சோதனை நடத்தினர். முன்பதிவு பெட்டியில் உள்ள குளியலறை அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் கிடந்த மூன்று பெரிய பைகளை எடுத்து சோதனை நடத்தினர். அதில், 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அந்தப் பைகளைக் கொண்டுவந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கவுரங்க மாலிக் (22) மற்றும் சந்துபாலா ராணா (22) என்பது தெரியவந்தது. இவர்கள், சொந்த மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு பயணச்சீட்டு எடுக்காமலேயே வந்ததும், திருப்பூரில் உள்ள ஒரு குளிர்பான கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
ஜூன் 21ம் தேதி, திருப்பூரில் இருந்து ஒடிசாவுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து 9 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். இதேபோல் இவர்கள் கஞ்சா கடத்தி வந்து, சில்லறை விலையில் திருப்பூரில் விற்பனை செய்து வந்துள்ளனர். கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.