நாமக்கல் அருகே, திருமணம் என்ற பெயரில் இரண்டு மூன்று நாட்கள் புது கணவருடன் குடும்பம் நடத்திவிட்டு, கையில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டும் கில்லாடி பெண் உள்ளிட்ட கும்பல் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருடைய மனைவி சந்தியா (வயது 26). இவருடைய சொந்த ஊர் மதுரை ஆகும். இவர்களுக்கு செப். 7- ஆம் தேதி கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரை அம்மன் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது.
தனபாலும் கடந்த பல ஆண்டாக திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லையே என்ற கவலையில் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் பெரிய அளவில் சொந்த பந்தங்கள் இல்லாத ஏழைப்பெண் என்பதாலும், அழகாக இருந்ததாலும் சந்தியாவை இல்லற துணையாக ஏற்க முடிவு செய்தார். திருமணச் செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார்.
திருமணத்தின்போது பெண் வீட்டார் தரப்பில் அவருடைய அக்காள், மாமா எனக்கூறிக் கொண்டு இரண்டு பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் தனபாலுக்கு பெண் பார்த்துக் கொடுத்த, மதுரையைச் சேர்ந்த கல்யாண தரகர் பாலமுருகன் (வயது 45) என்பவரும் திருமணத்தில் கலந்து கொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு பெண் தரகர் பாலமுருகன், திருமண கமிஷனாக 1.50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு அங்கிருந்து பறந்து விட்டார். இல்லற வாழ்வில் நுழைகிறோம் என்ற நினைப்புகளுடன் இரண்டாம் நாள் இரவைக் கழித்த தனபாலுக்கு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி சந்தியாவை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய அலைபேசியை தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பெண் பார்த்துக் கொடுத்த தரகர் பாலமுருகன், திருமணத்தின்போது வந்திருந்த உறவினர்களின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோதும் அவையும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
எல்லோருடைய அலைபேசிகளும் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால், தனபால் சந்தேகம் அடைந்தார். தன் வீட்டு பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த பட்டுப்புடவை, மணப்பெண் கொண்டு வந்திருந்த துணிமணிகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது ஒருபுறம் இருக்க, அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு திருமணம் செய்வதற்காக மணமகள் தேடி வந்தனர். வேறு ஒரு தரகர் மூலம் அவருக்கும் சந்தியாவின் புகைப்படம் கிடைத்துள்ளது.
இதையறிந்த தனபால், உள்ளூர் இளைஞரிடம் சந்தியாவின் புகைப்படத்தைக் கொடுத்த தரகர் குறித்து விசாரித்தபோது அவருடைய பெயர் தனலட்சுமி (வயது 45) என்பது தெரிய வந்தது. சந்தியாவை பிடிக்க திட்டமிட்ட தனபால், உடனடியாக தனலட்சுமியை தொடர்பு கொண்டு, தான் அந்தப் பெண்ணை மணந்து கொள்ள விரும்புவதாகக் கூறி, உள்ளூர் இளைஞரின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.
சந்தியா தரப்பிலும் அந்த இளைஞரை பிடித்துள்ளதாக சிக்னல் கிடைக்கவே, அலைபேசி மூலமாகவே திருமணத்தையும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து திருச்செங்கோட்டில் வைத்து செப். 23- ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவானது. இதற்காக மணப்பெண் சந்தியா, தரகர் தனலட்சுமி, உறவினர் ஐயப்பன் (வயது 37) ஆகியோர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்து சேர்ந்தனர்.
அங்கு ஏற்கனவே அவர்களுக்காக வலை விரித்து காத்திருந்த தனபாலும், உறவினர்களும், சந்தியா மற்றும் அவருடன் வந்த தனலட்சுமி, ஐயப்பன், கார் ஓட்டி வந்த ஜெயவேல் (வயது 38) ஆகிய நான்கு பேரையும் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். தாங்கள் இப்படி வசமாக சிக்கிக் கொள்வோம் என்று அறியாத அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சந்தியா உள்ளிட்ட நால்வரையும் பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதுரையைச் சேர்ந்த இவர்கள், இதுவரை சந்தியாவுக்கு ஆறு பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது 7வதாக ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றபோதுதான் சிக்கிக் கொண்டுள்ளனர். அதாவது, தனபாலுக்கு திருமணத்தை முடித்த பதினைந்தே நாளில் அதே ஊரில் இன்னொரு திருமண வலை விரித்து உள்ளனர்.
இந்த கும்பல் சந்தியாவை, ஒருவருடன் திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரே வாரத்திற்குள் மணமகன் மற்றும் அவருடைய வீட்டாருடன் நெருங்கிப் பழகி, அவர்கள் அசந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் நகைகள், பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சந்தியா ஓட்டம் பிடித்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
பணம், நகைகள் எதுவும் கிடைக்காதபோது கல்யாண தரகு கமிஷனுடன் தலைமறைவாகி விடுகின்றனர். இந்த கும்பல் இதுவரை 7 பேரை மட்டும்தான் ஏமாற்றி இருக்கிறார்களா? உண்மையில் இந்த கும்பலிடம் சிக்கி சீரழிந்தவர்கள் எத்தனை பேர்? எந்தெந்த ஊரில் கைவரிசை காட்டியுள்ளனர்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. சினிமாவை விஞ்சும் இந்த சம்பவம் பரமத்தி வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.