Skip to main content

75 ஆண்டுகள்! தி.மு.க.வும் இந்திய மாநிலக் கட்சிகளும்-ஒரு பருந்து பார்வை

Published on 15/09/2024 | Edited on 15/09/2024
75 years!  DMK and Indian State Parties-A Hawk's View


திமுகவின் பவளவிழாவுக்காக தமிழ்நாடு முழுவதும் திமுகவின் கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று பவளவிழாவுக்கான லட்சினையை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பவள விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருக்கும் நிலையில், திமுகவும்  இந்தியாவிலுள்ள மற்ற மாநில கட்சிகளும் குறித்தான ஒரு பார்வை இது.

* இன்று இந்திய அரசியலில் வலிமையாகத் திகழும் மாநிலக் கட்சிகளில் ஒன்று திராவிட முன்னேற்றக் கழகம். இது ,1949 செப்டம்பர் 17ஆம் நாள் தோற்று விக்கப்பட்டது. இக்கட்சியின் முன்னோடிகள் திராவிடர் கழகம் (1944), சுயமரியாதை இயக்கம் (1925), நீதிக்கட்சி (1916) ஆகியவை. இந்த இயக்கங்கள், சமூகத்தில் ஒரு வகுப்பார் ஆதிக்கத்தைச் செலுத்துவதை எதிர்த்துப் போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டவை.

* இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (பாரதிய ராஷ்டிரிய சமிதி), சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணாமுல் காங்கிரஸ், அகாலி தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, பிஜூ ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் முதலான பலவிதமான மாநிலக் கட்சிகளிடையே தனித்துவமான அரசியல் கட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் விளங்குகின்றது. அது இந்திய அரசியலில் பரப்பனரல்லாத வெகுமக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தல் – மாநில உரிமையைக் கோருதல் – தேசியவாத / மதவாத அதிகார மையப்படுத்துதல் எதிர்ப்பு ஆகிய தனித்துவமான அரசியல் கொள்கைப் போக்கைக் கொண்டுள்ள அரசியல் கட்சியாகத் திகழ்கின்றது.

* தனிநாடு முதல் தனிமாநில உரிமை கோரல் வரை பல டஜன் கணக்கான கட்சிகளை – இயக்கங்களைக் கொண்டுள்ள வடகிழக்கு இந்தியாவைத் தவிர்த்து விட்டு பார்த்தால், இந்திய அரசியலில் வலுவாக மாநில மக்கள் நலனை வெளிப்படுத்தும் அரசியல் கட்சிகள் பஞ்சாப் (அகாலி தளம்), ஜம்மு-காஷ்மீர் (தேசிய மாநாட்டுக் கட்சி), தமிழ்நாடு (திராவிட முன்னேற்றக் கழகம்) மூன்று பகுதிகளில் உருவாயின. இந்த மூன்று பகுதிகளின் கட்சிகளிலும் திமுகதான் அதிக வெற்றிகரமான கட்சியாகத் திகழ்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பஞ்சாப்பின் அரசியலில் அகாலி தளத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்திய அரசியலில் ஜம்மு-காஷ்மீர் தன்னுடைய மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

* தனது 75 ஆண்டுக்கால வரலாற்றில் திமுக, தமிழ்நாட்டு அரசியலில் 25 ஆண்டு காலம் ஆளும் கட்சியாகவும், 35 ஆண்டு காலம் வலுவான எதிர்க்கட்சியாகவும் திகழ்ந்துள்ளது; இதே அளவிலான காலம் ஒன்றிய அரசியலிலும் பங்கெடுத்துள்ளது. ஒன்றிய அரசியலின் பல முக்கியமான திருப்புமுனைகளை ஏற்படுத்திய கட்சியாகவும் விளங்கியுள்ளது. இதுபோன்ற ஓர் அரசியல் வரலாறு வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் திமுக தமிழ்நாட்டின் சமூக – அரசியல் – பொருளாதார - பண்பாட்டு வளர்ச்சிப் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சியிலும் நல்வாழ்வு குறியீடுகளிலும் ஒருங்கிணைந்த முன்னேற்றம் அடைந்து, தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளது.

* இவ்வளவு நீண்ட காலம் வலுவான அரசியல் இயக்கமாகத் திகழும் கட்சியில் பிளவுகள் ஏற்படுதல் இயல்பு. அவ்வாறு அதிமுக, மதிமுக இரண்டு முக்கியமான பிளவுகளைச் சந்தித்தப் போதிலும், திமுக தொய்வு சிறிதும் அடையாத கட்சியாக விளங்குகின்றது.

* இதுபோலவே, திமுகவின் மீதான அரசியல் குற்றச்சாட்டுகள் வாரிசு அரசியல், ஊழல் ஆகியவை தொடர்பாக முன்வைக்கப்படுகின்றது. ஆனால் மு.க. ஸ்டாலினோ அல்லது உதயநிதியோ அரசியல் வாரிசுகளாக அல்லாமல், கொள்கை வாரிசுகளாகத் திகழ்கின்றனர். இதுவரை திமுகவின் சுமத்தப்பட்ட எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.

 * அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஆகிய திமுகவின் இரண்டு பெரும் தலைவர்கள் மிகுந்த தனித்துவமானவர்கள். இவர்கள் அரசியல்வாதிகளாக மட்டுமில்லாமல், சீரிய சிந்தனையாளர்களாகவும் – சமூக சீர்த்திருத்தவாதிகளாகவும் – கலை இலக்கியப் படைப்பாளர்களாகவும் – சிறந்த பேச்சாளர்களாகவும் திகழ்ந்தனர். சுருக்கமாகச் சொன்னால், தமிழ் மொழியின் அடையாளங்களாகத் திகழ்ந்தனர். இதுமட்டுமில்லாமல் இவர்களைப் போன்ற பல்துறை நாட்டமுள்ளவ எண்ணற்றவர் திமுகவில் இருந்தனர்; இருக்கின்றனர். இதுபோன்ற ஒரு தனித்துவமான அம்சம், வேறெந்த மாநிலக் கட்சியிலும் காணக் கிடப்பதற்கில்லை.

சார்ந்த செய்திகள்