தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (26/08/2021) பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்து பேசினார்.
இந்த மசோதாவுக்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து, மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து சட்டம் அமலுக்கு வரும். மசோதாவால் மாணவர்களுக்குப் பொறியியல், கால்நடை, மருத்துவம், மீன்வளப் படிப்புகளில் உள்ஒதுக்கீடு கிடைக்கும்.
இதனிடையே, சட்டப்பேரவையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும்; பி.காம் பட்டப்படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும்; திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்குப் புதிய மண்டல மையங்கள் அமைக்கப்படும்; தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்;
செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சி பாடப் பிரிவு தொடங்கப்படும்; வெவ்வேறு பாடப் பிரிவுகளில் 100 பாடப் புத்தகங்கள் ரூபாய் 2 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.